வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து பலி..!


வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து பலி..!
x

பூந்தமல்லி அருகே வீட்டில் தனியாக இருந்த 4 வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர்:

பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி (வயது 35). பூந்தமல்லி நகராட்சியில் வருவாய் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிந்தியா இவர்களுக்கு ஆரோ (8) என்ற மகனும் வின்சி (4) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ரவி அவரது மனைவி மற்றும் மகன் மூன்று பேரும் நடை பயிற்சிக்கு சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது சிறுமி மயங்கி இருந்துள்ளார். உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார் இறந்து போன சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி மாடியின் மேல் இருந்து கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

இன்று காலை வழக்கம்போல் சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மூன்று பேரும் வீட்டின் கதவை சாத்திவிட்டு நடை பயிற்சிக்கு சென்று விட்டனர். தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அழுதுள்ளார். பின்னர் வீட்டின் பின் பகுதியில் உள்ள கதவை திறந்து பால்கனி வழியாக வந்து அங்கிருந்த சேரின் மீது நின்று சத்தம் போட்டு அழுதுள்ளார்.

திடீரென நிலை தடுமாறி ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த காவலாளி சிறுமி கீழே படுத்திருப்பதை கண்டு சிறுமியை மீட்டபோது, சிறுமி மயக்கமாக இருப்பதாக கூறியதையடுத்து பக்கத்து வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தான் சிறுமி இறந்து போய் உள்ளார். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்து சிறுமி இறந்து போனது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story