ராட்சத அலையில் சிக்கி உடைந்த படகு மூழ்கியது; தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு


ராட்சத அலையில் சிக்கி உடைந்த படகு  மூழ்கியது; தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 5 Jun 2023 6:45 PM GMT (Updated: 5 Jun 2023 6:46 PM GMT)

ராட்சத அலையில் சிக்கி உடைந்த படகு மூழ்கியது; தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

ராமநாதபுரம்

ராமேசுவரம்

மன்னார் வளைகுடா கடலில் ராட்சத அலையில் சிக்கி நாட்டுப்படகு மூழ்கியது. தத்தளித்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

நாட்டுப்படகு மூழ்கியது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதி, சில நாட்களாக சீற்றமாகவே காணப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று அதிகாலை கிறிஸ்து என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் கிறிஸ்து, லிட்சன், குழந்தை, பூரிஸ்டன், டின்னல்ஸ்டன் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்தபோது திடீரென இவர்களின் படகு ராட்சத கடல் அலையில் சிக்கியது. இதனால் படகின் அடிப்பகுதி பலகை உடைந்து கடல் நீர் படகுக்குள் புகுந்தது. சிறிது நேரத்தில் படகானது கடலில் மூழ்கியது. இதனால் 5 மீனவர்களும் படகில் இருந்த பிளாஸ்டிக் கேன், மிதவை உள்ளிட்டவைகளை பிடித்தபடி கடலில் தத்தளித்தனர்.

5 மீனவர்கள் மீட்பு

அப்போது அந்த வழியாக மற்றொரு நாட்டுப்படகில் மீன்பிடிக்க வந்த பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள், கடலில் தத்தளித்த இந்த 5 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு பாம்பன் தெற்குவாடி கடற்கரை பகுதிக்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்ட 5 மீனவர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து கடலோர போலீசார், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story