தனியார் நிறுவன ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கு:மேலும் ஒரு வாலிபர் கைது ரூ.3 லட்சம் பறிமுதல்


தனியார் நிறுவன ஊழியரை கடத்தி பணம் பறித்த வழக்கு:மேலும் ஒரு வாலிபர் கைது ரூ.3 லட்சம் பறிமுதல்
x

சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியரை காருடன் கடத்தி சென்று பணம் பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே தனியார் நிறுவன ஊழியரை காருடன் கடத்தி சென்று பணம் பறித்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

ரூ.23 லட்சம் பறிப்பு

பெருந்துறையை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 49). இவர் சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 23-ந் தேதி தான் வேலை பார்க்கும் தொழிற்சாலையின் மற்றொரு கிளையில் இருந்து பண பரிவர்த்தனையை முடித்து கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சத்தியமூர்த்தியின் காரை தடுத்து நிறுத்தி காருடன் கடத்தி சென்றனர். பின்னர் சத்தியமூர்த்தியிடம் இருந்த ரூ.23 லட்சத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கண்ணங்குடியை சேர்ந்த மனோகர், நவநீதன், இளையராஜா மற்றும் கோவையை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகிய 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தையும் பறிமுதல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 27) என்பவரையும் சென்னிமலை போலீசார் கைது செய்தனர்.

ரூ.3 லட்சம் பறிமுதல்

இதையடுத்து சுரேசிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'அவர் கோவையில் உள்ள ஒரு நகை கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்ததும், பின்னர் வேலைக்கு செல்லாமல் இருந்த அவர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும். அதற்காக ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுரேசிடம் இருந்து ரூ.3 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ராஜசேகர் மற்றும் ராமதுரையை போலீசார் வலைவீசி ேடி வருகிறார்கள்.


Next Story