கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி - காப்பாற்ற சென்ற இளம் பெண்ணும் நீரில் மூழ்கி உயிரிழப்பு


கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி - காப்பாற்ற சென்ற இளம் பெண்ணும் நீரில் மூழ்கி உயிரிழப்பு
x

சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற சென்ற போது இளம் பெண்ணும் ,குழந்தையும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

சிவகிரி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா லட்சுமி நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி மலர் (வயது 31) இருவரும் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். கணவன் மனைவி இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்பாக கூலி வேலைக்காக சிவகிரிக்கு வந்து தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் சிவகிரிக்கு அருகாமையில் உள்ள விசுவநாதப்பேயில் உள்ள கருப்பு தோட்டத்தில் வேலை செய்வதற்காக வேலைக்கு சேர்ந்து இருந்தனர்.நேற்று மாலை நாலு மணி அளவில் வேலையை முடித்து விட்டு அங்கு தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக மலர் சென்றார்.

இவருடன் இவரது உறவினரின் குழந்தை ஜீவஸ்ரீ (4) என்ற குழந்தையும் சென்றுள்ளது. கிணற்றில் குளித்து கொண்டிருக்கும் போது குழந்தை தடுமாறி கிணற்றின் உள்ளே விழுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மலர் அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்தார்.

ஆனால் மலருக்கு நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரின் உள்ளே மூழ்கி உயிரிழந்தனர். குளிக்கச் சென்ற மலரையும் குழந்தையையும் காணவில்லை என மலரின் கணவர் உள்பட வேலை செய்து கொண்டிருந்த உறவினர்கள் தேடி வந்தனர். அப்போது கிண்ற்றின் அருகில் மலரின் சில பொருட்கள் இருந்ததால் அவர் கிணற்றினுள் விழிந்திருக்கலாம் என நினைத்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த சிவகிரி போலீசார், வாசுதேவல்லூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு குழுவினர் கிணற்றில் குதித்து தேடி இருவரது உடல்களையும் மீட்டனர். போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story