தியாகதுருகம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் 9 பேர் கைது


தியாகதுருகம் அருகே    இரு தரப்பினரிடையே மோதல்    9 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2022 6:45 PM GMT (Updated: 14 Oct 2022 6:46 PM GMT)

தியாகதுருகம் அருகே இரு தரப்பிரனரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி


கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மணி (வயது 21). இவரது தம்பி சித்தேரிப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது தம்பியை பள்ளியில் இருந்து அழைத்து வரவதற்காக மணி அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான அய்யம்பெருமாள் மகன் பிரகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சித்தேரிப்பட்டுக்கு சென்றார்.

அப்போது பள்ளிக்கூடத்துக்கு எதிரே நின்று கொண்டிருந்த சித்தேரிப்பட்டு பகுதியை சேர்ந்த ராமலிங்கம், தமிழ்ச்செல்வம், லோகேஷ் ஆகியோர் மணி மற்றும் பிரகாஷிடம் தண்டலைக்காரர்கள் ஏன் சித்தேரிப்பட்டிற்கு படிக்க வருகிறீர்கள் என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கோஷ்டிமோதலாக மாறி, அவர்கள் ஒருவரையொருவர் திட்டி, தாக்கிக் கொண்டனர்.

25 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே தியாகதுருகம் போலீசில் புகார் செய்தனர். அதன்படி, தண்டலை கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சித்தேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், தமிழ்செல்வம், லோகேஷ், பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம், சரண் உள்ளிட்ட 12 பேர் மீதும் வழக்கப்பதிவு செய்தனர். பெருவங்கூர் கிராமம் முத்துசாமி மகன் சண்முகம் (18), முருகப்பிள்ளை மகன் சரண் (18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தண்டலை கிராமத்தை சேர்ந்த மணி, பிரகாஷ், விக்னேஷ், தங்கபாலு, கண்ணன், கதிர் உள்ளிட்ட 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தண்டலை கிராமம் அய்யம்பெருமாள் மகன் பிரகாஷ் (19), பழனிசாமி மகன் விக்னேஷ் (19), இளங்கோவன் மகன் தங்கபாலு (20), ராமசாமி மகன் கண்ணன் (18), மாரிமுத்து மகன் கண்ணன் (43) மற்றும் 2 சிறுவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story