இரு தரப்பினரிடையே மோதல்12 பேர் காயம்; 8 பேர் மீது வழக்கு
வீட்டுமனை பிரச்சினையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
காணை,
விழுப்புரம் அருகே கப்பூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 55). இவர் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் 3 செண்ட் வீட்டுமனை வாங்க 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.13,500-ஐ முன்பணமாக கொடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமலிங்கம் இறந்துவிட்டார். அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன், ராமலிங்கம் மகன் ராஜேஷிடம் இருந்து அந்த வீட்டுமனையை ரூ.90 ஆயிரம் கொடுத்து கிரயம் செய்துகொண்டார். ஆனால் தாமோதரன், அந்த பிரச்சினைக்குரிய இடத்தில் கொட்டகை அமைத்திருந்தார். அந்த கொட்டகையை காலி செய்யுமாறு தியாகராஜன் தரப்பினர் கூறினர். அப்போது அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பையும் சேர்ந்த தாமோதரன், அவரது மகன் பார்த்தசாரதி, பாண்டுரங்கன் மகன்கள் ஏழுமலை, செல்வக்குமார், தாமோதரன் மனைவி கற்பகவள்ளி, மகள்கள் பவதாரணி, பவானி மற்றும் தியாகராஜன், அவரது தரப்பை சேர்ந்த மோகன்ராஜ், அய்யனார், வீரக்கண்ணு, நளினி ஆகியோரும் காயமடைந்தனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். தாமோதரன் அளித்த புகாரின்பேரில் தியாகராஜன், மதன்ராஜ், வீரக்கண்ணு, அய்யனார் ஆகிய 4 பேர் மீதும், அதேபோல் தியாகராஜன் அளித்த புகாரின்பேரில் பார்த்தசாரதி, செல்வக்குமார், தாமோதரன், ஏழுமலை ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.