நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்


நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
x

கூடலூரில் இருந்து தாளூர் சென்ற அரசு பஸ் 3 இடங்களில் பழுதாகி நின்றது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் இருந்து தாளூர் சென்ற அரசு பஸ் 3 இடங்களில் பழுதாகி நின்றது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

அரசு பஸ்கள்

கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாமலும், காலாவதியான நிலையிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு கூடலூரில் இருந்து பந்தலூர் தாலுகா தாளூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

இதற்கிடையே கூடலூர் செம்பாலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அரசு பஸ் பழுதடைந்து நடுவழியில் நின்றது. மின் சாதனத்தில் (சென்சார்) பிரச்சினை ஏற்பட்டதால் பஸ் நடுவழியில் நின்றதாக தெரிகிறது.

பள்ளி மாணவர்கள் அவதி

பின்னர் டிரைவரின் பல்வேறு முயற்சியால் அரை மணி நேரத்துக்கு பிறகு பஸ் மீண்டும் புறப்பட்டது. தொடர்ந்து நாடுகாணி பொன்னூர் வந்தபோது மீண்டும் பஸ் பழுதடைந்து நின்றது. இதனால் மாணவர்கள், நடுவழியில் அவதிப்பட்டனர். பின்னர் பஸ் பழுது பார்க்கப்பட்டு புறப்பட்டது. ஆனால் பொன்வயல் பகுதியில் 3-வது முறையாக பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பல்வேறு முயற்சி செய்த பின்னரும் பஸ்சை இயக்க முடியவில்லை.

இதனால் காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தவித்தனர். தொடர்ந்து காலதாமதம் ஆவதை உணர்ந்த பயணிகள் வேறு வாகனங்களில் தங்களது ஊர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு தாமதமாக சென்றனர். பள்ளிகளுக்கு மாணவர்கள் காலதாமதமாக சென்றார்கள்.

பராமரிக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சம்பந்தப்பட்ட பஸ்சில் சென்சார் பிரச்சினை உள்ளது. இதை பழுது பார்க்க கோவை அல்லது ஊட்டியில் போக்குவரத்து கழக பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பஸ்களை பராமரிப்பது இல்லை. எனவே, பஸ்களை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story