காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எடப்பாடி:-
எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள காதாட்டியூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 25), பால் வேன் டிரைவர். இவர் அருகே உள்ள கஞ்சியூர் பகுதியை சேர்ந்த கவுசல்யா (23) என்ற பட்டதாரி பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனால் அருண், கவுசல்யா தம்பதியினர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை வழக்கம் போல் அருண் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கவுசல்யா குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் அருண் வீட்டில் இருந்து தொடர்ந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் கவுசல்யா தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுசல்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் தகவல் அறிந்து வந்த அருண், மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
தாயைத்தேடி அழுத குழந்தை
பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில் கவுசல்யா இறந்தது குறித்து சங்ககிரி உதவி கலெக்டர் சவுமியா விசாரித்து வருகிறார்.
பட்டதாரி பெண் தற்கொலை சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய அதேநேரத்தில் தாயை இழந்த கவுசல்யாவின் 6 மாத கைக்குழந்தை பாலுக்காக தாயைத்தேடி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.