அரசு பஸ்சில் நகையை தவறவிட்ட பயணி; உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர்
அரசு பஸ்சில் நகையை தவறவிட்ட பயணி; உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டர்
சென்னையில் இருந்து தஞ்சை வந்த அரசு பஸ்சில் 2 பவுன் நகையை பயணி தவறி விட்டார். அவற்றை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டரை பொதுமக்கள் பாராட்டினர்.
அரசு விரைவு பஸ்
தஞ்சையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து, விரைவு பஸ் சென்னைக்கு சென்று விட்டு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சென்னையிலிருந்து புறப்பட்டு தஞ்சை திரும்பியது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம்செய்தனர்.
இந்த பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டராக தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். பஸ் நேற்று அதிகாலை தஞ்சை பணிமனைக்கு வந்தது. பஸ்சை உதயகுமார் நிறுத்தி விட்டு சோதனை செய்தார்.
2 பவுன் சங்கிலி
அப்போது பஸ்சில் 2 பவுன் சங்கிலி கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நகையை எடுத்த உதயகுமார், இது குறித்து பணிமனை மேலாளருக்கு தகவல் அளித்துவிட்டு தங்கச்செயினை அவரிடம் ஒப்படைத்தார்.இந்நிலையில், அதே பஸ்சில் பயணம் செய்த தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி தேவிநகர் பகுதியைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் தன்னுடைய 2 பவுன் சங்கிலி தொலைந்து விட்டது என்றும், பஸ்சில் கிடக்கிறதா? என பார்க்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பணிமனை மேலாளரிடம், பாலகுமரன் தனது தங்க சங்கிலி குறித்த அடையாளங்களை தெரிவித்தார். அப்போது தான் பஸ்சில் கிடந்தாக எடுத்து கொடுக்கப்பட்ட சங்கிலி, பாலகுமரனுடையது என தெரிய வந்தது. இதையடுத்து தங்கச் சங்கிலி, பணிமனை கிளை மேலாளர் முன்னிலையில் பாலகுமாரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்கள் பாராட்டு
தங்கச்சங்கிலியை பெற்றுக் கொண்ட பாலமுருகன் கண்டக்டர் உதயகுமாருக்கு நன்றி தெரிவித்தார். போக்குவரத்து ஊழியர் உதயகுமாரின் நேர்மையான இந்தசெயலுக்கு, போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன