பேய் விரட்டுவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை


பேய் விரட்டுவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை
x

பேய் விரட்டுவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

கோவில் பூசாரி

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பழனி என்கிற பழனியாண்டி (வயது 66), பூசாரி. இவர் தனது வீட்டில் பொதுமக்களுக்கு விபூதி போட்டு மந்திரிப்பது வழக்கம். இந்த நிலையில் 15 வயது சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் கோவில் பூசாரியிடம் சிறுமியை அவரது அண்ணன் மற்றும் தாய் காண்பித்து நிலையை எடுத்துக்கூறியிருக்கின்றனர். அப்போது பூசாரி பழனி, சிறுமியை மறுநாள் அவரது தாயுடன் மட்டும் வருமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து மறுநாள் சிறுமியை அவரது தாயார் அழைத்து சென்றார். அங்கு சிறுமியை மட்டும் தனியாக மாடிக்கு அழைத்து சென்று பேய் விரட்டுவதாகவும், தாயாரை சற்று தள்ளி வெளியில் நிற்குமாறு கூறினார். இதனை நம்பி சிறுமியின் தாயார் அங்கிருந்து தள்ளி நின்றார்.

போக்சோ வழக்கு

இதற்கிடையே மாடிக்கு அழைத்து சென்று சிறுமியை பூசாரி பழனி பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் இதனை வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும் என மிரட்டி அனுப்பினார். இந்த நிலையில் சிறுமி கா்ப்பமடைந்தார். அதன்பின் தான் பூசாரி பழனி, சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூசாரி பழனியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி பழனிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும், குற்றவாளியின் அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

மயக்கமடைந்ததால் பரபரப்பு

இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட பூசாரி பழனியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது மகிளா கோர்ட்டு அறையில் இருந்து பாதுகாப்பாக போலீசார் அழைத்து வந்த போது, பூசாரி பழனி கண்ணீர்விட்டு அழுது புலம்பினார். மேலும் திடீரென அவர் மயக்கமடைந்து விழுந்தார். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்க நிலையில் இருந்தவரை மீட்டு ஆசுவாசப்படுத்தினர்.

இந்த சம்பவத்தால் மகிளா கோர்ட்டு அறை அருகே சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவரை திருச்சி சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story