2 நாட்களாக காத்திருக்கும் கப்பல், பாய்மரப்படகு
பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க 2 நாட்களாக கப்பல், பாய்மரப்படகு காத்திருக்கின்றன.
ராமேசுவரம்
ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் அமைந்துள்ளது ரெயில் பாலம். இந்த ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை கடக்க வரும் படகு மற்றும் கப்பல்கள் துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் கடந்து செல்லும். இந்த நிலையில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இருந்து மன்னார்வளைகுடா கடல் பகுதிக்கு செல்வதற்காக இழுவை கப்பல் ஒன்று பெரிய மிதவை கப்பலை இழுத்தபடி தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக வந்து துறைமுக அதிகாரிகளின் அனுமதிக்காக தென்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் கோட்டியா என்று சொல்லக்கூடிய பாய்மரப்படகு ஒன்றும் தென்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இழுவை மற்றும் பாய்மரப்படகின் ஆவணங்களை துறைமுக குடியுரிமை அதிகாரிகள் சரிபார்த்த பின்னர் இன்னும் ஓரிரு நாளில் மிதவை கப்பல் மற்றும் பாய்மரப்படகு தூக்குப்பாலத்தை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.