பரமக்குடியில் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்
பழங்குடி இன மக்களுக்கு குடிமனைப்பட்டா, இனச்சான்று வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பரமக்குடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
பரமக்குடி,
பழங்குடி இன மக்களுக்கு குடிமனைப்பட்டா, இனச்சான்று வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் பரமக்குடி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன், இடது கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ராஜா, முனியசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் முரளி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வியட்நாம், மாதர் சங்க செயலாளர் அய்யம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பரமக்குடி தாலுகா வேந்தோணி ஊராட்சிக்குட்பட்ட லீலாவதி நகரில் வசிக்கும் குருவிக்காரர், மலைக்குறவர், நரிக்குறவர் மற்றும் போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி சமத்துவபுரம் வெற்றி நகரில் வசிக்கும் கணிக்கர் உள்பட காட்டுநாயக்கர் இன மக்களுக்கு பழங்குடியின ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். லீலாவதி நகர் மக்களுக்கு சுடுகாடு, ஊருணி அமைத்து கொடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்பு பரமக்குடி சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முயன்ற போது சப் கலெக்டர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார். உடனே அவர்கள் போராட்டத்தில் கைவிடாமல் மீண்டும் தொடர் போராட்டத்தை ஈடுபட்டனர். அதை தொடர்ந்து 5 பேரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு போராட்டம் கைவிடப்பட்டது