கட்சி அலுவலகத்துக்கு திடீர் வருகை: அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை


கட்சி அலுவலகத்துக்கு திடீர் வருகை: அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
x

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு திடீரென வந்த எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி திடீரென நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.

கட்சி அலுவலகத்தில், கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்ட அறைகளை சீர்செய்யும் பணிகளை பார்வையிட்டார்.

பொதுச்செயலாளர் தேர்தல்

பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தனி அறையில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கடந்த ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற கலவரத்தின்போது கட்சி அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து சென்ற ஆவணங்களை போலீசார் மீட்டு, கோர்ட்டில் ஒப்படைத்துள்ளதை பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தங்களை அ.தி.மு.க.வில் சேர்ந்தனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்முறை கலாசாரம்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசுக்கும், கருணாநிதி, மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்க வேண்டும். எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வன்முறை கலாசாரம் தலை தூக்கிவிடும். துப்பாக்கி கலாசாரம், பெட்ரோல் குண்டு கலாசாரம் வந்துவிடும். 2006-2011-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியின்போது நெல்லையில் கூஜா வெடிகுண்டு கலாசாரம் வந்தது. 1998-ம் ஆண்டு அத்வானி தமிழகம் வந்தபோது குண்டுவெடிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.

தற்போது கோவை, மதுரை, கன்னியாகுமரி, சேலம், பல்லாவரம் பகுதிகளில் பெட்ரோல் வீச்சு நடந்துள்ளது. இதுபோல வெடிகுண்டு கலாசாரம், கத்தி கலாசாரம், கஞ்சா கலாசாரம், சூதாட்ட கலாசாரம் இவை அனைத்தும் சர்வ சாதாரணமாக தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளானர்.

ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் அடைப்பாரா?

மக்களை திசை திருப்புவதற்காக ஆ.ராசா இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசி வருகிறார். இதற்கு ஒரு மதம்தான் கிடைத்ததா இதுபோன்ற செயல்களை மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இதுபோன்று யாராவது பேசியிருந்தால் குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்க வேண்டும்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்வு விரைவில் நடைபெறும். அதில் எந்த மாறுபாடும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story