கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலி
கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலியானார்.
கொடுமுடி
கொடுமுடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலியானார்.
தவறி விழுந்த ஆசிரியை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காங்கேயம் சாலையில் உள்ள முத்துநகரை சேர்ந்தவர் சந்திரா (வயது 56). இவர் கொடுமுடி அருகே காசிபாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். சந்திரா நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் சாகுல் ஹமீது என்பவரது மோட்டார் சைக்கிளில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கொடுமுடி எல்லையூர் என்ற இடத்தில் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது சாகுல் ஹமீது பிரேக் பிடித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சந்திரா தவறி கீழே விழுந்தார்.
சாவு
இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு சந்திரா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் அங்கு சென்று சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் ஆசிரியை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.