குடிபோதையில் தனியார் பள்ளி பஸ்சை கடத்தி சென்ற வாலிபர்
திட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் குடிபோதையில் தனியாா் பள்ளி பஸ்சை கடத்தி சென்ற வாலிபை போலீசார் துரத்தி சென்று பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி:
திட்டக்குடி கோழியூரில் சில தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்கள் இரவு நேரம் நிறுத்தி வைக்கப்படும். நேற்று அதிகாலை வேப்பூர் அடுத்துள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சை மர்ம நபர் குடிபோதையில் கடத்தி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்ததைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வேப்பூர் போலீசார் பின்னால் துரத்திச்சென்று தனியார் பள்ளி பஸ்சை மடக்கினர்.
விருத்தாசலத்தை சேர்ந்தவர்
பின்னர் பஸ்சை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விருத்தாசலம், திரு.வி.க.நகரை சேர்ந்த அருணாச்சலம்(வயது 23) என்பதும் குடிபோதையில் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சை கடத்தி வந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட பஸ்சை வேப்பூர் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.
கைது
இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சினிமாவை மிஞ்சம் வகையில் குடிபோதையில் வாலிபர் தனியார் பள்ளி பஸ்சை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.