கோட்டார் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு:2 குழந்தைகளின் தாயை கரம்பிடித்த வாலிபர்


கோட்டார் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு:2 குழந்தைகளின் தாயை கரம்பிடித்த வாலிபர்
x
தினத்தந்தி 18 May 2023 1:00 AM IST (Updated: 18 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாயமான வாலிபர் 2 குழந்தைகளின் தாயுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். வாலிபரின் குடும்பத்தினர் நடத்திய பாசப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மாயமான வாலிபர் 2 குழந்தைகளின் தாயுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். வாலிபரின் குடும்பத்தினர் நடத்திய பாசப்போராட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

வாலிபர் இளம்பெண்ணுடன் தஞ்சம்

அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. உடனே அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோட்டார் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த வாலிபர் நேற்று முன்தினம் அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருடன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அந்த இளம்பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியவந்தது. ஆனால் பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து குழந்தைகளுடன் வசித்து வந்த இளம்பெண்ணுடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

குடும்பத்தினர் அதிர்ச்சி

இதுகுறித்து வாலிபரின் தாயாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வாலிபரின் தாயாரும், சகோதரியும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு தன் மகன், இளம்பெண்ணை திருமணம் செய்து அழைத்து வந்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

எனினும் மகனை தன்னுடன் அழைத்துச் சென்று விடவேண்டும் என்று அந்த தாய் குறியாக இருந்தார். ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது கடினமான விஷயம், எனவே அந்த பெண்ணை விட்டு தன்னுடன் வந்துவிடு என்று கூறினார். ஆனால் இளம்பெண்ணுடன் வாழ விரும்புவதாக வாலிபர் கூறியதோடு தாயாரையும், சகோதரியையும் வீட்டுக்கு செல்லும்படி கூறினார்.

பாசப் போராட்டம்

எனினும் தாயாரின் மனம் மாறவில்லை. மகனுடன் பாசப் போராட்டம் நடத்தினார். சுமார் ஒரு மணி நேரமாக நீடித்த இந்த பாசப் போராட்டம் வீணானது. இதனால் தாயாரோ கண்ணீர் மல்க போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

இதை தொடர்ந்து வாலிபரின் சகோதரி தனது தம்பியிடம் தான் கொடுத்த நகையை திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால் நகையை உடனே தரமுடியாது என்றும், சில மாதங்கள் கழித்து நகையை திருப்பித் தருவதாக வாலிபர் கூறினார். ஆனால் சகோதரியோ விடவில்லை. அந்த நகையை உடனே தனக்கு வாங்கி தருமாறு போலீசிடம் கேட்டார். இதுபற்றி விசாரித்த போது நகை பிரச்சினை நடைபெற்ற இடம் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பது தெரிய வந்தது. எனவே நகை பிரச்சினையை அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் கூறி பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள்.

ஏமாற்றம்

இதை தொடர்ந்து ஏமாற்றத்துடன் தாயும், மகளும் திரும்பி சென்றனர். இளம்பெண்ணின் குழந்தைகளையும் தான் கவனித்துக் கொள்வதாக வாலிபர் போலீசாரிடம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நேற்று போலீஸ்நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story