பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம்,
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், பாரதிநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அமுதா. நேற்று காலை இவரது வீட்டின் மொட்டை மாடியில் பொழிச்சலூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சூர்யா(வயது 28) என்பவர் சிறிய கத்தியை வைத்துக்கொண்டு தகராறு செய்தார். இதுபற்றி அங்கிருந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர்.இதையடுத்து பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூர்யாவை பிடித்து, பல்லாவரம் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
அப்போது அங்கு வந்த சூர்யாவின் தாய் ராதிகா, "எனது மகன் சில நாட்களாக மன அழுத்தத்தில் உள்ளான். அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறோம். அவனை சொந்த ஊரான வேலூர் மாவட்டம், ஆம்பூருக்கு அழைத்து செல்கிறோம்" என்றார். இதையடுத்து போலீசார், அவரிடம் எழுதி வாங்கி கொண்டு சூர்யாவை அனுப்பினர்.
தற்கொலை மிரட்டல்
அப்போது தாய் ராதிகா, மனைவி அன்பு ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்ட சூர்யா, திடீரென பல்லாவரம் போலீஸ் நிலையத்தின் மொட்டை மாடிக்கு ஓடிச்சென்று, அங்குள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று, 'எனக்கு வாழபிடிக்கவில்லை, கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள போகிறேன்' என மிரட்டல் விடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், மொட்டை மாடிக்கு சென்று, சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனமும் வரவைக்கப்பட்டது. சூர்யாவிடம் தாய், மனைவி பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்கவில்லை.
3 மணிநேரத்துக்கு பிறகு
'என்னை கொலை செய்ய போகிறார்கள், காப்பாற்றுங்கள்' என பேசியபடியே, கையில் வைத்திருந்த பெல்ட் கம்பியில் உடம்பில் கிழித்துக் கொண்டார். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாலையில் சூர்யாவை கீழே இறக்கினர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி போலீசார், அவருடைய தாய் மற்றும் மனைவியிடம் எழுதி வாங்கிக் கொண்டு சூர்யாவை அனுப்பி வைத்தனர். இதனால் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.