முன்விரோத தகராறில் வாலிபர் அடித்துக்கொலை
வந்தவாசி அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வந்தவாசி அருகே முன்விரோத தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர் அடித்துக்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த விழுதுபட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் சக்திவேல் (வயது 19). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சக்திவேல் நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமடக்கிய 17 வயது சிறுவன் திடீரென விறகு கட்டையால் சக்திவேலை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவன் கைது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்து, கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.முன்விரோத தகராறில் 19 வயது வாலிபரை சிறுவன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.