ஒரு தலைக் காதலால் நர்சை காரில் கடத்திய வாலிபர் - போலீசார் மடக்கி பிடித்தனர்


நர்சை காரில் கடத்திய வாலிபர்
x

ஒரு தலைக் காதலால் நர்சை காரில் கடத்திய வாலிபரையும், அவருடைய நண்பர்களையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

வேளச்சேரி,

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 23 வயது இளம்பெண் ஒருவர் நர்சாக வேலை செய்து வருகிறார். நேற்று காலை அவர், வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஆஸ்பத்திரி விடுதியில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது காரில் வந்த 2 பேர் நர்சை, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். காருக்குள் மேலும் 2 பேர் இருந்தனர். இதுபற்றி அங்கிருந்தவர்கள் வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது நர்சை கடத்திச்சென்ற கார், தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக செல்வதை கண்டுபிடித்தனர். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் செங்கல்பட்டு, காஞ்சீபுரம். கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து உஷார்படுத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் அந்த கார், அச்சரப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அங்கிருந்த அச்சரப்பாக்கம் ரோந்து போலீசார் காரை மடக்கிப்பிடித்தனர். காருக்குள், நர்சு இருப்பது தெரிந்தது. அவரை கடத்தியதாக ராமநாதபுரம் திருவாடனை மருங்கூர் பகுதியை சேர்ந்த சபாபதி (வயது 27), அவரது நண்பர்களான ஹரிஷ் (20), அஜய் (25), ராஜேஷ் (40) ஆகியோரையும் மடக்கிப்பிடித்த போலீசார், வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வேளச்சேரி போலீசார் அச்சரப்பாக்கம் சென்று கடத்தப்பட்ட நர்ஸ் மற்றும் அவர்களை கடத்திய 4 பேரையும் வேளச்சேரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் சபாபதி கூறும்போது, "நர்சாக பணியாற்றும் அந்த பெண், எனது மாமன் மகள். முறைப்பெண்ணான அவரை நான் சிறு வயது முதலே ஒரு தலையாக காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டேன். ஆனால் எனக்கு திருமணம் செய்து கொடுக்காமல் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாக அறிந்தேன். இதனால் எனது முறைப்பெண்ணை அழைத்துச்சென்று திருமணம் செய்ய திட்டமிட்டேன்" என்றார்.

ஆனால் அதற்கு மீட்கப்பட்ட நர்ஸ், "எனது பெற்றோர் சொல்பவர்களைத்தான் திருமணம் செய்வேன்" என்றார்.

இதுபற்றி நர்சின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபாபதி மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story