விபத்து வழக்கில் நூதன தண்டனை பெற்ற வாலிபர் பஸ் மோதி சாவு
விபத்து வழக்கில் நூதன தண்டனை பெற்ற வாலிபர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து கோவில்பட்டிக்கு நேற்று அதிகாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. வண்ணார்பேட்டையை கடந்து தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் பஸ் சென்றபோது எதிரே ஒரு கார் வந்தது.
அப்போது, திடீரென்று பஸ்-கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கவிழ்ந்து அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நெல்லை தச்சநல்லூர் சிதம்பரம்நகர் பகுதியை சேர்ந்த நீர்காத்தலிங்கம் (வயது 39) என்பவர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
ஜாமீனில் வந்தவர்
நீர்காத்தலிங்கம் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.
இவர் கடந்த பிப்ரவரி மாதம் மதுபோதையில் காரை ஓட்டி சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி விசாரித்து, நீர்காத்தலிங்கத்தை நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இரவு 12 மணிக்கு மேல் 1 மாதம் சுத்தம் செய்ய வேண்டும் என்று நூதன தண்டனை விதித்து ஜாமீன் வழங்கினார். ஜாமீனில் வந்த அவர் நள்ளிரவு நேரத்தில் டாஸ்மாக் கடையை சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை நீர்காத்தலிங்கம் வண்ணார்பேட்டை செல்வதற்காக காரில் சென்றபோது, விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.