நெல்லை பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி


நெல்லை பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலி
x

நெல்லையில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லையில் சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

எலக்ட்ரீசியன்

நெல்லை அருகே உள்ள சிவந்திபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் பெரியதுரை (வயது 26), எலக்ட்ரீசியன். இவர் நேற்று காலையில் கே.டி.சி. நகருக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மதியம் கே.டி.சி. நகர் பாலத்தில் தெற்கில் இருந்து வடக்காக தாழையூத்தை நோக்கி பெரியதுரை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

பாலத்தின் நடுப்பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அங்குள்ள தடுப்பில் மோதியது. இதில் பெரியதுரை பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே உள்ள சாலையோரத்தில் விழுந்தார். சுமார் 50 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்ததால் பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெரியதுரையை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண ஏற்பாடு

விபத்தில் பலியான பெரியதுரை சிறு வயதில் இருந்தபோதே அவருடைய தாயார் இறந்து விட்டார். இதனால் பெரியதுரையை அவருடைய சித்தி வளர்த்து ஆளாக்கினார்.

இந்த நிலையில் பெரியதுரைக்கு விரைவில் திருமணம் செய்ய அவரது வீட்டில் ஏற்பாடு நடந்து வந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story