பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்


பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
x

பதிவெண் இல்லாமல் சுற்றுபவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை

பதிவெண் இல்லாமல் சுற்றுபவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஏ.டி.எம். கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து சுமார் ரூ.72 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக அரியானா மாநிலத்தில் 2 பேரும், கர்நாடக மாநிலத்தில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இரவு நேரங்களில் கூடுதலான போலீசார் வாகன தணிக்கையிலும், ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ் நிலையம், தங்கும் விடுதிகளிலும் போலீசார் உஷார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

வாகன சோதனை

வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பதிவெண் இல்லாத இருசக்கர வாகனங்களை பலர் ஓட்டுவது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பதிவெண் இல்லாமல் இரவில் இருசக்கர வாகனத்தில் சுற்றுபவர்களை போலீசார் மடக்கி பிடித்து, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். பின்னர் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாகனத்திற்கான ஆவணங்கள் பெற்ற பிறகு அந்த வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் சுற்றக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.


Next Story