கூடலூர் அருகே வீட்டை உடைத்து சூறையாடிய காட்டு யானை- கிராம மக்கள் அச்சம்
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டை உடைத்து காட்டு யானை சூறையாடியது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
வீட்டை உடைத்த காட்டு யானை
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் தினமும் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டாலும் கிராமங்களுக்குள் புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கூடலூர் அருகே செளுக்காடி பகுதியில் காட்டு யானை நேற்று முன்தினம் இரவு புகுந்து வீடுகளை முற்றுகையிட்டது.
பின்னர் காப்புமூலா பகுதிக்கு சென்றது. தொடர்ந்து ஸ்ரீதரன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து தள்ளியது. இதில் வீட்டின் உட்புற சுவர்களும் இடிந்தது. இந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்த ஸ்ரீதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். மேலும் காட்டு யானை வீட்டுக்குள் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது.
இழப்பீடு வழங்க கோரிக்கை
மேலும் விடியற்காலை வரை அப்பகுதியில் நின்று விவசாய பயிர்களையும் நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கிராம மக்களும் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட தொழிலாளி ஸ்ரீதரன் கூடலூர் வன அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் வீட்டை காட்டு யானை உடைத்து சூறையாடி உள்ளதால் அதற்கான இழப்பீடு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். மேலும் அகழி வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.