முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய பெண்ணை பணியமர்த்த வேண்டும்


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய பெண்ணை பணியமர்த்த வேண்டும்
x

சரியான பதில் அளித்தபோதும் நிராகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய பெண்ணை பணியமர்த்த வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மதுரை

மதுரையைச் சேர்ந்த வினோபிரதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதினேன். இதில் 150-க்கு 97.77 மதிப்பெண் பெற்றேன். பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் பிரிவில் வருகிறேன். இப்பிரிவுக்கு கட்-ஆப் மதிப்பெண் 98.19 என நிர்ணயம் செய்தனர். குறைந்த மதிப்பெண் பெற்றதால் என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவில்லை. ஆனால் தேர்வில் கேட்ட 71 மற்றும் 108 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்துள்ளேன். இதன்படி எனக்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் 2 கேள்விக்கு சரியாக பதில் அளித்துள்ளார். அதாவது, அவர் பதில் அளித்த 71-வது கேள்வி ஆட்சேபத்தினால் நீக்கப்பட்டு உள்ளது. 108-வது கேள்விக்கு மனுதாரர் சரியாக பதில் அளித்துள்ளார். ஆனால் இணையதளத்தில் வெளியான விடைச்சுருக்கத்தில் வேறு பதில் இருந்ததால், மனுதாரருக்கு அதற்கான மதிப்பெண் வழங்கவில்லை.

விடைச்சுருக்கத்தின் பதில் சரியானது என்பதை நிரூபிக்காமல், அந்த விடைதான் சரியானது என வல்லுனர் குழு எப்படி முடிவுக்கு வந்தது? சில சூழ்நிலைகளில் தவறு வெளிப்படையாக தெரியும்போது கோர்ட்டு தலையிடாமல் இருக்க முடியாது.

இந்தியாவின் பிரதமர் யார்? என்பது கேள்வியாக இருந்தால், அதற்கு நரேந்திர மோடி என பதில் அளித்தால், விடைச்சுருக்கத்தில் ராகுல்காந்தி என்றுதான் உள்ளது என்று கூறுவது அபத்தமாகும். மனுதாரர் சரியாக பதில் அளித்திருக்கும் போது கோர்ட்டு கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. எனவே, மனுதாரருக்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்கி, அவர் 150-க்கு 98.77 மதிப்பெண் பெற்றதாக கருதி, தாமதம் இன்றி அவருக்கு ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story