பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறன் மகளுடன் கதறி அழுத பெண்
மாற்றுத்திறன் மகளுடன் கதறி அழுத பெண்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அனுப்பர்பாளையம் புதூர் காந்திரோடு பகுதியை சேர்ந்த யாதம்மாள் என்பவர் தனது 10 வயது மாற்றுத்திறனாளி மகளுடன் மனு கொடுக்க வந்தார். மனுவுக்கு டோக்கன் வாங்கி வருமாறு அங்கிருந்த போலீஸ்காரர்கள் கூற உடனடியாக யாதம்மாள் தனது மகளுடன் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்குக்கு முன் தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறினார்.
பின்னர் அங்கிருந்த போலீசார் அவர்களை துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிராதனிடம் அழைத்துச்சென்றனர். அவரிடம் யாதம்மாள் கண்ணீர் சிந்தியபடி கூறும்போது, எனது கணவருக்கு சொந்த வீடு அவினாசியில் உள்ளது. திருமணம் முடிந்ததும், கணவரின் பூர்வீக வீட்டில் வசித்து வந்தோம். எனது மாமியாருடன் பிரச்சினை ஏற்பட்டதால் என்னை விரட்டிவிட்டனர். அதன்பிறகு 8 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது மாமியார் கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டார். வாடகை செலுத்தி எனது மகளை கவனித்து குடும்பம் நடத்த முடியவில்லை. அதனால் பூர்வீக வீட்டில் வசிக்க சென்றால் என்னை எனது கணவரின் வீட்டினர் விரட்டி விடுகிறார்கள். எனது கணவரின் ஒத்துழைப்பும் இல்லை. மாற்றுத்திறன் குழந்தையுடன் என்னால் வாடகை வீட்டில் வசிக்க முடியவில்லை. பூர்வீக வீட்டை மீட்டுக்கொடுக்க வேண்டும். சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் சிரமப்படுகிறேன். உரிய தீர்வு இல்லாவிட்டால் எனது மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை' என்றார். பின்னர் காவல்துறை உதவியுடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டு அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.