தலையில் பீரோ விழுந்து இளம்பெண் பலி.. திண்டுக்கல்லில் சோகம்
பீரோ விழுந்ததில் ரம்யாவின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எஸ்.தும்மலப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). எலக்ட்ரீசியன். அவருடைய மனைவி ரம்யா (23). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. எஸ்.தும்மலப்பட்டியில் உள்ள வீட்டில் இவர்கள் வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ரம்யா தனது வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்தார். அவரது அருகில் ஹரிஹரன் தூங்கினார். அந்த அறையில் பழைய பீரோ ஒன்று இருந்தது. சிமெண்டு கற்களை அடிப்பகுதியில் வைத்து, அதன் மீது அவர்கள் பீரோவை வைத்திருந்தனர்.
நள்ளிரவில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது ரம்யாவின் கால், திடீரென பீரோவின் அடிப்பகுதியில் இருந்த ஒரு கல் மீது பட்டது. அந்த கல் நகர்ந்ததில், ரம்யா மீது பீரோ விழுந்தது. இதில், தலைப்பகுதியில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு ஹரிஹரன் திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் தனது தங்கை ரோகிணி உதவியுடன் ரம்யாவை மீட்டு, சிகிச்சைக்காக வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனையடுத்து ரம்யாவின் உடல், பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.