தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்


தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
x

வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில்:

தூக்கில் பிணமாக தொங்கினார்

ஆவுடையார்கோவிலை அடுத்த இரும்பா நாடு அருகே அம்புகோட்டை கிராமத்தில் உள்ள மரத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்ட பொதுமக்கள், ஏம்பல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பாலு என்ற சுந்தர்ராஜ்(வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து, உடலை தூக்கில் தொங்க விட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கொலை செய்து...

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த சுந்தர்ராஜின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த 3 பேர், சுந்தர்ராஜை அடித்து கொன்று விடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றனர்.

இதனால் அவர்கள்தான் சுந்தர்ராஜை கொலை செய்து, உடலை தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். எனவே உடனடியாக அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தால்தான், சுந்தர்ராஜின் உடலை வாங்குவோம் என்று கூறி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இருந்தனர்.

கடும் நடவடிக்கை

இதையடுத்து மாலையில் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார், சுந்தர்ராஜின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து சுந்தர்ராஜின் உடலை உறவினர்கள் பெற்று சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தால் ஆவுடையார்கோவில் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story