2-வது திருமணம் செய்த ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளித்ததை ரத்து செய்தது சரிதான்


2-வது திருமணம் செய்த ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளித்ததை ரத்து செய்தது சரிதான்
x

2-வது திருமணம் செய்து கொண்ட ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளித்ததை ரத்து செய்தது சரி தான் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

2-வது திருமணம் செய்து கொண்ட ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளித்ததை ரத்து செய்தது சரி தான் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

போலீசில் புகார்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். குடும்ப பிரச்சினை காரணமாக, அவர் தனது கணவரிடம் விவாகரத்து பெற்றார். பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இதற்கிடையே அந்த பெண் ஆசிரியையுடன், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பழகினார். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு கோவிலில் திருமணம் செய்தனர். சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டனர்.

சில மாதங்களில் அந்த ஆசிரியர் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். இருவரும் அரசு ஊழியர் என்பதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வழக்கு

பின்னர் நடந்த விசாரணையின்போது ஆசிரியை, தன்னை ஏமாற்றி ஆசிரியர் திருமணம் செய்ததற்கு சாட்சிகளுடன் நிரூபித்தார். இதனால் ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியைக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், தன் மீது எந்த குற்றமும் இல்லை. அதனால் கட்டாய பணி ஓய்வு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியை மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஆசிரியைக்கு கட்டாய பணி ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

கட்டாய ஓய்வு நடவடிக்கை ரத்து சரிதான்

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, தனிநீதிபதியின் உத்தரவு சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவுகளுக்கு எதிராக அமைந்துள்ளது என ஆட்சேபம் தெரிவித்தார்.

விசாரணை முடிவில், ஏற்கனவே திருமணமானதை தன்னிடம் மறைத்து 2-வதாக திருமணம் செய்ததை உரிய சாட்சிகளுடன் ஆசிரியை நிரூபித்துள்ளார். ஆனால் அந்த ஆசிரியரோ, தனக்கு ஏற்கனவே திருமணமானது, 2-வது மனைவிக்கு தெரியும் என்று கூறுவதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. எனவே ஆசிரியை மீதான கட்டாய ஓய்வு நடவடிக்கையை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட தேவையில்லை. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story