சேலத்தில் பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவிகள் உள்பட 3 பேர் காயம்


சேலத்தில் பரபரப்பு தாறுமாறாக ஓடிய கார் மோதி மாணவிகள் உள்பட 3 பேர் காயம்
x

சேலத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 2 மாணவிகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

சேலம்

தாறுமாறாக கார் ஓடியது

சேலம் சின்னபுதூரை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகள் கிருத்திகா (வயது 18). திருவாக்கவுண்டனூரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகள் சிவரஞ்சனி (18). இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகின்றனர். கல்லூரிக்கு செல்ல மாணவிகள் 2 பேரும் நேற்று காலை மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த வழியாக சேலம் சித்தனூரை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் விஜய் (26) காரை ஓட்டி வந்தார். காரில் சங்கர் நகரை சேர்ந்த அருள் (35) உள்பட 2 பேர் இருந்தனர்.

ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே வந்த போது தாறுமாறாக கார் ஓடியது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் இந்த கார், திருவாக்கவுண்டனூரை சேர்ந்த கர்ணன் சென்ற மோட்டார் சைக்கிள் மீதும், மாணவிகள் சென்ற மொபட்டிலும் அடுத்தடுத்து மோதியது. பின்னர் சிறிது தூரம் சென்று சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் நின்றது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிர சிகிச்சை

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவிகள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த விஜய் மற்றும் அருள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம்பட்ட 5 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது'காரில் வந்தவர்கள் குடிபோதையில் இருந்தனர். அவர்களுக்கும் காயம் ஏற்பட்டு உள்ளதால் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளோம். சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காரில் இருந்து தலைமறைவான ஒருவரை தேடி வருகிறோம்' என்றார்கள்.


Next Story