கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில்730 கிராமில் பிறந்த குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றி சாதனை


தினத்தந்தி 23 May 2023 5:30 AM GMT (Updated: 23 May 2023 5:32 AM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த பாஞ்சாலி நகரை சேர்ந்தவர் முத்துமீனாட்சி (வயது 19). திருமணமாகி கருவுற்ற இவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவருக்கு, 28 வார கர்ப்ப காலத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 730 கிராம் மட்டுமே இருந்தது.

உடனடியாக குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவ கண்காணிப்பாளர் சந்திரசேகர், மகப்பேறு தலைமை மருத்துவர் கவிதா, டாக்டர்கள் மது, செல்வி, பழனி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கண்காணித்து வந்தனர். மூச்சுத்திணறல், நுரையீரல் வளர்ச்சி குறைவால் அவதியுற்ற குழந்தைக்கு 'சர்பேக்ணன்ட்' என்ற விலை உயர்ந்த சிறப்பு மருந்துகளுடன், சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தை நேற்று சுவாசக்கருவியின்றி சுவாசித்ததுடன், தாய்ப்பாலும் குடிக்க தொடங்கியது.

தற்போது, ஒரு கிலோ எடையுடன் உள்ள அந்த குழந்தைக்கு, விழித்திரை, செவி, மூளைக்கு செல்லும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு அனைத்தும் சீராக செயல்படுவதும் தெரிந்தது. இதையடுத்து குழந்தையை பெற்றோரிடம் மருத்துவக்குழுவினர் ஒப்படைத்தனர். 730 கிராமில் பிறந்த ஆண் குழந்தைக்கு சிகிச்சையளித்து காப்பாற்றி சாதனை படைத்த டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.


Next Story