கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஒருங்கிணைப்பு கூட்டம்
கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஆகியோரை கொண்டு நடத்திட வேண்டுமென்று, முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடுமையான நடவடிக்கை
பின்னர் கலெக்டர் உமா பேசும்போது கூறியதாவது:-
கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாராந்தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்டு முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கட்டுபாட்டில் செயல்படும் 88383 52334 என்ற செல்போன் எண்ணிற்கு நேரடியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ராஜூ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, மாவட்ட மேலாளர்(டாஸ்மாக்) கமலக்கண்ணன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.