குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மீது நடவடிக்கை


குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மீது நடவடிக்கை
x

குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை சார்பில் குழந்தை திருமணம் தடுத்தல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஊராட்சி அளவிலான குழு கூட்டம் நடந்தது.

இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி சமூக நலத்துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்தின் சார்பில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையேடுகளை வெளியிட, அதனை மாவட்ட சமூக நல அலுவலர்கள், காவல்துறை அதகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில், குழந்தை திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். எனவே குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் மற்றும் திருமணத்தில் பங்கேற்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தை திருமணம் குறித்த தகவலை 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கோ அல்லது 181 என்ற மகளிர் உதவி எண்ணிற்கோ அல்லது மாவட்ட சமூக நலத்துறையினருக்கோ தெரியப்படுத்த வேண்டும்.

ஆய்வு

மேலும் கிராம ஊராட்சி தலைவர்கள் மக்களிடம் நேரடி தொடர்பில் இருப்பதால், அவர்கள் தங்களுடைய கிராமங்களில் ஏதேனும் குழந்தை திருமணம் நடைபெறுகிறதா? என்பது குறித்து தினந்தோறும் ஆய்வு செய்திட வேண்டும்.

குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். .நாம் அனைவரும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வியை பேணி பாதுகாத்திட வேண்டும். அந்த வகையில் குழந்தை திருமணத்தை தடுத்திட பொதுமக்கள் உள்படஅனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

.கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) விஜயகார்த்திக்ராஜ், மாவட்டசமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள், சங்கராபுரம் வட்டாரத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story