தமிழர்கள் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


தமிழர்கள் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x

‘பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, தமிழர்கள் பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தலைசிறந்த பண்புகளில் ஒன்றான விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள் தமிழர்கள் என்றால் அது மிகையாகாது. தலைசிறந்த பண்புகள் கொண்ட தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருப்பது வருத்தம் அளிக்கும் செய்தியாகும். இந்த செய்தி உண்மைக்கு மாறானது என்ற அரசு தரப்பில் அறிவித்திருப்பது ஆறுதல்.

தமிழர்கள் மீது அவதூறு பரப்புவது என்பது கடும் கண்டனத்துக்குரியது. வதந்தி பரப்புவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதுபோன்ற வதந்திகள் தமிழகத்தின் தொழில் அமைதிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் சீரழிவை ஏற்படுத்தும்.

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

பிற மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்யும் அதேவேளை, தமிழகத்தில் உள்ள நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தவேளையில், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டுவரப்படும் என்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை அரசின் கவனத்துக்கு கொண்டுவருவது என் கடமை.

எனவே பிற மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பையும், தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பையும் பெற்றுத் தருவதையும், வதந்திகள் பரப்பியோரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தருவதையும் தி.மு.க. அரசு உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story