சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை தேவை-கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலாடி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
சாயல்குடி
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலாடி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
யூனியன் கூட்டம்
கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் அண்ணாதுரை, துணை தலைவர் ஆத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடந்தது. அப்போது கவுன்சிலர் மாயகிருஷ்ணன் பேசும்போது, 2 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில், வரவு செலவு கணக்கில் கொசு மருந்து அடித்தல் செலவிற்கு ரூ.9 லட்சம் கணக்கு காட்டப்பட்டு வருகிறது. கொசு மருந்தை தவிர கடலாடி ஒன்றியத்தில் எந்த பணியும் நடைபெற்றதாக தெரியவில்லை. மற்ற பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புனவாசல் விலக்கு ரோட்டில் இருந்து காளி கோவில் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் குமரையா: கீழச்செல்வனூர் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. கவுன்சிலர் ராஜேந்திரன், சிறைக்குளம் பகுதிகளில் சேதமான சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையை சீரமைக்க நடவடிக்கை
கவுன்சிலர் பிச்சை: ஏர்வாடி பகுதியில் சுகாதாரம், குடிநீர் கேள்விக்குறியாக உள்ளது அதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய கவுன்சிலர் முருகன்: நரிப்பையூர் அருந்ததியர் காலனி குடியிருப்புகள் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிவிட்டன. இடியும் நிலையில் உள்ள குடியிருப்புகளுக்கு பதிலாக அங்குள்ள பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் காதர் சுல்தான் அலி: வாலிநோக்கம் கிராமத்தில் உள்ள தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவாதம்
ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன்: தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டர் மூலம் துறை அதிகாரிகளுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.