தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை


தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னை விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னை விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது தென்னை விவசாயிகள் கலெக்டரிடம் கோரியதாவது:- மாவட்டத்தில் 8,300 எக்ேடர் பரப்பில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மழை குறைந்த பகுதிகளில் மகசூல் குறைந்து உள்ளது.

தென்னை விவசாயிகளுக்கு ராமநாதபுரத்தில் வணிக வளாகம் அமைத்து கொடுக்க வேண்டும். தற்போது தேங்காய்க்கு குறைந்த விலை கிடைப்பதால் வெளிமாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால் அதிக செலவு ஏற்பட்டு லாபம் குறைந்து விடுகிறது. இங்கு வணிக வளாகம் இருந்தால் தென்னை விவசாயிகள் உற்பத்தி பொருட்களை சேமித்து உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியும்.

உலர்கலவை

சோலார் திட்டத்தில் உலர்கலவை அமைத்து கொடுக்க வேண்டும். அதன் மூலம் தேங்காய் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும். தென்னையில் பூச்சி தாக்குதலை தடுக்க வேளாண்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்து பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்த வழிகாட்ட வேண்டும். மற்ற பயிர்களுக்கு வறட்சி நிவாரண தொகை வழங்குவது போல் தென்னை சாகுபடிக்கும் வழங்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:- தென்னை விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் பொறியியல் துறையின் மூலம் 40 சதவீத அரசு மானியத்தில் சோலார் திட்டத்தில் உலர்கலவை அமைத்து கொடுக்கப்படுகிறது.

உரிய நடவடிக்கை

தேங்காய் பருப்புகளை பதப்படுத்தி மதிப்பூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும். மாவட்டத்தில் 2 இடங்களில் தென்னை நாற்றங்கால் பண்ணை உள்ளது. மண்டபம், திருப்புல்லாணி பகுதி தேங்காய்க்கு நல்ல கிராக்கி உள்ளது. தென்னை விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் தனுஷ்கோடி, விற்பனைக்குழு செயலாளர் ராஜா மற்றும் தென்னை விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story