ரூ.94 ஆயிரம் கடனை திரும்ப கேட்டதால் நடிகர் தாடி பாலாஜியின் மனைவியுடன் வாலிபர் கைகலப்பு - போலீஸ் விசாரணை
ரூ.94 ஆயிரம் கடனை திரும்ப கேட்டதால் நடிகர் தாடி பாலாஜியின் மனைவியுடன் வாலிபர் கைகலப்பில் ஈடுபட்டார். இருதரப்பினரும் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த மாதவரம் வி.பி.சி. நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்(வயது 29). இவர், அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவர், மாதவரம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த சினிமா நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா என்பவரிடம் கடனாக ரூ.94 ஆயிரம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கலைச்செல்வன் அலைக்கழித்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாடி பாலாஜியின் மனைவி நித்யா நேராக கலைச்செல்வன் வீட்டுக்கு சென்று தான் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சென்னை பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இது தொடர்பாக இருதரப்பினர் அளித்த புகாரின்ேபரில் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.