சேறும், சகதியுமாக மாறிய ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம்


சேறும், சகதியுமாக மாறிய ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம்
x

ஊட்டியில் தொடர் மழையால் ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் தொடர் மழையால் ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

கோடை சீசன்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிலவுகிறது. இதை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இது தவிர வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர்.

குறிப்பாக சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது.

ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம்

இதை தவிர்க்க ஊட்டி நகராட்சி சார்பில் ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காருக்கு ரூ.50, பஸ் மற்றும் வேனுக்கு ரூ.100, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வந்தனர்.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடம் சேறும், சகதியுமாக மாறியது.

அவதி

அங்கு வாகனங்கள் சென்று வருவதால், அந்த இடம் மேலும் மோசமான நிலைக்கு செல்கிறது. இதனால் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிரிக்கும் என்பதால், ஏ.டி.சி. வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பலத்த மழை

இதற்கிடையில் ஊட்டியில் சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலகம், காந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் 1 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். மேலும் ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த வாடிக்கையாளர்கள், விற்க வந்த வியாபாரிகள் சிரமம் அடைந்தனர்.மழைக்கு நடுவே ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை குடைகளை பிடித்தபடி கண்டு ரசித்தனர். இந்த மழை மலைக்காய்கறிகள், தேயிலை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன்(24 மணி நேரத்தில்) முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-8.4, குந்தா-10, அவலாஞ்சி-25, எமரால்டு-5, பாலகொலா-13, பர்லியார்-12, கேத்தி-17, எடப்பள்ளி-18, கூடலூர் -9.


Next Story