நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூல்


நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூல்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாக குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியமிடம், விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அந்த மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து, 2000-ம் ஆண்டுக்கு பிறகு என்.எல்.சி.க்கு வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதிலாக பணம் கொடுத்ததை ஏற்க முடியாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கழிவுநீரால் தொற்றுநோய்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் மாதவன்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. குறிப்பாக கிள்ளை, பின்னத்தூர், கனரகப்பட்டு, பிச்சாவரம், தில்லை விடங்கன் பகுதி விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஈச்சங்காடு வழியாக பரவனாற்றில் விடுவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு சங்க தலைவர் சிவ சக்திவேல்: வானமாதேவியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் ஏதும் அமைக்கப்படாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் வாடகை

மேல்புளியங்குடி செல்வராஜ்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பாதிக்கப்பட்டது. அந்த பயிரை அறுவடை செய்ய, அறுவடை எந்திர டிரைவர்களை தொடர்பு கொண்டால் அதிக வாடகை கேட்கின்றனர். இதனால் மழைநீர் தேங்கியுள்ள வயல்களில் நெற்பயிரை அறுவடை செய்ய வேளாண்மை பொறியியல் துறை மூலம் பெல்ட் அறுவடை எந்திரத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். மேலும் அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை உள்ளதால், பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து அறுவடை செய்ய ஆவண செய்ய வேண்டும்.

அதேபோல் நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாக பல்வேறு விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

இதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம், விவசாயிகள் அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story