முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சியை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். இதேபோல் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சியை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர். இதேபோல் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
முத்துப்பேட்டை பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தினமும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் மங்கள் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மருது ராஜேந்திரன், மன்னர் மன்னன், சுல்தான், திருமலை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையம் முன்பு போராட்டம்
குடிநீர் வழங்காத முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் இல்லாததால் அங்கிருந்த மற்ற அலுவலர்கள் முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அ.தி.மு.க.வினர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குடிநீர் வழங்காத செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
பேச்சுவார்த்தை
இதனையடுத்து அங்கு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேரூராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர். போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பரபரப்பு
இதேபோல் ஆசாத்நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் ஓரிரண்டு நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.