ஒன்றிய வார்டுகளில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி
குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒன்றிய வார்டுகளில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒன்றிய வார்டுகளில் அ.தி.மு.க., பா.ஜனதா ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
வாக்கு எண்ணிக்கை
குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி காலி பதவியிடங்களுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் வாக்குச்சீட்டுகள் மூலமாக நடந்தது. ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டு, குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டுக்கும் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்தது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. ராஜாக்கமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அறையின் சீல்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மேஜைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரண்டு மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டது.
அ.தி.மு.க.-பா.ஜனதா ஆதரவு வேட்பாளர்கள்
இதில் அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளரான புனிதா வெற்றி பெற்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் இவர் சுயேச்சையாக போட்டியிட்டார். இவர் 1564 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு, தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
இதேபோல் குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை அந்த ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளர் பேபி வெற்றி பெற்றார். பா.ஜனதா ஆதரவு வேட்பாளரான இவர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டார். இவர் 1,425 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். பா.ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி னர். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கோகிலா 837 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள்
தக்கலை ஊராட்சி ஒன்றியம் மருதூர்குறிச்சி பஞ்சாயத்து 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அமுதாராணி 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சினேகலதா 120 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அமுதாராணியிடம், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, முன்னாள் ஊராட்சி தலைவர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் கண்ணனூர் பஞ்சாயத்து 4-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் ராஜேஷ்குமார் 211 வாக்குகள் பெற்றும், காட்டாத்துறை பஞ்சாயத்து 5-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் பிளஸ்ஸி 255 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த தேர்தல் அதிகாரிகள் சான்றிதழை வழங்கினர். மேலும் வெற்றி பெற்ற பிளஸ்ஸி திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜாண் பிரைட்டுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
பள்ளம்துறை பஞ்சாயத்து 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த கோல்டுவின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.