அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x

வள்ளியூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் கலையரங்கில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, அமைப்பு செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை பேசுகையில், ''ஏழை, எளிய மக்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவரது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் இங்கு சிறப்பாக நடந்துள்ளது. நீட் தேர்வு ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, சிலிண்டருக்கு மானியம் போன்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து தற்போது, எந்த புதிய திட்டமும் இல்லாத ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடக்கிறது.

மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட ராதாபுரம் கால்வாய் திட்டமும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. திசையன்விளையில் அம்மா திருமண மண்டபத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. பணகுடி, திசையன்விளை, வள்ளியூர் பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தவில்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் நாள் தொலைவில் இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடும். இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க. தொண்டர்களின் சொத்து. இதை முடக்க நினைப்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மாவிடாது'' என்றார்.

கூட்டதில், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பால்துரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story