அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திடீர் தர்ணா
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி மற்றும் மாவட்ட அனைத்து கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.1,509 கோடி மதிப்பில் மரக்காணத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்து இன்று காலை விழுப்புரம் காந்தி சிலை அருகில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திடீர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ஜூணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூடுவிழா
போராட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்தும், அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க.வினர் கோஷங்களை எழுப்பினர். இதை அறிந்த விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக சி.வி.சண்முகம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களுக்கு மேலாகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை, புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. மாறாக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் படிப்படியாக மூடுவிழா நடத்தி வருகிறார். முதலில் விழுப்புரத்தில் அ.தி.மு.க. உருவாக்கிய ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மூடினார்கள்.
மிகப்பெரிய போராட்டம்
தற்போது மரக்காணத்தில் ரூ.1,509 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. இதனை 2 மாதமாக ரகசியமாக வைத்துள்ளனர்.
இப்படி இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களையும் கைவிட்டு இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் அறிவிக்க வேண்டியதிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரேஷ்பாபு, ராஜா, கண்ணன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் ரகுநாதன், வளவனூர் நகர செயலாளர் முருகவேல், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.