சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வை கண்டித்து திண்டுக்கல் உள்பட 7 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் உயர்வை கண்டித்து திண்டுக்கல் உள்பட 7 இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் பேகம்பூரில் அ.தி.மு.க சார்பில் சொத்துவரி, மின்கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. 525 பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் மக்கள் நலனுக்கான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை. பால் விலை ரூ.3 குறைப்பதாக அறிவித்துவிட்டு தற்போது ரூ.12 உயர்த்தி இருக்கிறது. அரிசி, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மாதம் ரூ.5 ஆயிரத்தில் குடும்பம் நடத்திய தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.15 ஆயிரம் தேவைப்படும் நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தி விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்தவில்லை. 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி இருக்கிறது.

வாரிசு அரசியல்

தி.மு.க.வில் அனுபவம் வாய்ந்த மூத்த எம்.எல்.ஏ.க்கள் பலர் உள்ளனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கின்றனர். வாரிசு அரசியலால் தான் நாடு கெட்டுபோனது. ஜவகர்லால் நேருவுக்கு பின்னர் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி என வாரிசு அரசியலால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் இல்லாமல் போனது. அதே பாணியில் கருணாநிதிக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரானார். தற்போது மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார். வாரிசு அடிப்படையில் தி.மு.க. எவ்வாறு செல்கிறது என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். தி.மு.க.விடம் 38 எம்.பி.க்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை. மக்கள் மீது வரியை சுமத்திய தி.மு.க. அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நத்தம் விசுவநாதன்

இதேபோல் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பழனி நகர செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, முன்னாள் எம்.பி. குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் ஆகிறது. ஆனால் தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மாறாக பால்விலை, மின்கட்டணம், சொத்துவரி போன்றவற்றை உயர்த்தி மக்களை துயரத்தில் தள்ளிவிட்டனர். அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால் திராவிட மாடல் என்ற ஒரு சொல்லை பயன்படுத்தி மக்களை தி.மு.க.வினர் ஏமாற்றி வருகின்றனர். சினிமா துறையை ஒட்டுமொத்தமாக கைப்பற்றி உள்ளனர். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதால் அவர்களது குடும்பத்துக்குதான் பயனே தவிர மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை. பால் விலையை கடுமையாக உயர்த்தியதால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருகிற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Related Tags :
Next Story