பிளாஸ்டிக் மதுபாட்டில் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை


பிளாஸ்டிக் மதுபாட்டில் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை
x

கண்ணாடி மதுபாட்டிலுக்கு பதிலாக பிளாஸ்டிக் மதுபாட்டில் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

கண்ணாடி மதுபாட்டிலுக்கு பதிலாக பிளாஸ்டிக் மதுபாட்டில் பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

மதுபான கடையில் ஆய்வு

ஈரோடு அருகே கதிரம்பட்டியில் உள்ள அரசு மதுபான கடையில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கடையில் உள்ள பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, கடையில் உள்ள இருப்புகள் சரியாக உள்ளதா?, ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வந்தார்களா? மற்றும் கடையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகளை கடந்த 3 நாட்களுக்கு முன்பு சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது டாஸ்மாக் துறையில் பணியாற்றும் பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தோம். பல இடங்களில் மதுபான கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதையும், இரவு நேரத்தில் கடை விற்பனை முடிந்து பணத்தை எடுத்து செல்வதில் சிக்கல் இருப்பதையும் அறிந்தோம். அதன்பேரில், முதலில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பை உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க உள்ளோம். மதுபான கடைகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க என்னென்ன வசதிகள் செய்ய முடியும், கடையில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்திட அனைத்து மாவட்டத்திலும் ஆய்வு செய்து வருகிறோம்.

கடும் நடவடிக்கை

மதுபான கடைகளின் மூலம் வருமானத்தை அதிகரிப்பது அரசின் நோக்கம் அல்ல. தவறான விற்பனையை தடுத்து, ஒழுங்குப்படுத்திட வேண்டும் என தமிழக முதல் -அமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதற்காக தான் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும் உத்தரவிட்டுள்ளோம். இதனால் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடக்காது என்ற நிலை 100 சதவீதம் உருவாகும். விரைவில் டாஸ்மாக் நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.

தமிழகத்தில் மூடப்பட்ட 500 மதுபான கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள், எந்த கடைகளில் ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறதோ அங்கு பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களை வெளியில் அனுப்பும் திட்டம் அரசிடம் இல்லை. தமிழகத்தில் கண்ணாடி மதுபாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவது என்பது ஆலோசனையில் உள்ளது. அனைத்து துறைகள் சார்பாக விரிவாக ஆலோசித்து, அதன்பின்னர் அறிவிக்கப்படும். இதுதொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.


Related Tags :
Next Story