போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை விளக்க கூட்டம்


போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை விளக்க கூட்டம்
x

போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில், சென்னையில் ஆசிரியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தை நேற்று நடத்தினார்கள். அதில் நிறைவேற்றுவதாக உறுதியளித்த 12 கோரிக்கைகள் குறித்தும் பேசினர்.

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆன்லைன் பதிவேற்றம் செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் (டிட்டோ ஜாக்) போராட்டம் அறிவித்தனர்.

இதையடுத்து இந்த குழுவில் (டிட்டோ ஜாக்) இடம்பெற்றிருந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் முதலில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன் பின்னர் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 30 அம்ச கோரிக்கைகளில் 12 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் அளித்த உறுதியை தொடர்ந்து நேற்று நடைபெறுவதாக இருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

விளக்கக் கூட்டம்

போராட்டம் வாபஸ் பெற்ற நிலையில், அதற்கு பதிலாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்த விளக்கக் கூட்டம் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று விளக்கக் கூட்டம் நடந்தது. இதில் டிட்டோ ஜாக் குழுவில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் வின்சென்ட் பால்ராஜ், தாஸ், செ.முத்துச்சாமி, மயில், சேகர், முத்துராமசாமி, தியோடர் ராபின்சன், சண்முகநாதன், காமராஜ், ஜெகநாதன், ஜான் வெஸ்லி உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அவர்கள் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாகவும், அமைச்சர் நிறைவேற்றுவதாக அறிவித்த 12 கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக பேசினார்கள்.

அதிகாரிகளும் பங்கேற்பு

முன்னதாக டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தாஸ், மயில் நிருபர்களிடம் கூறுகையில், '30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். அதிலும் குறிப்பாக எமிஸ் உள்ளிட்ட ஆன்லைன் பதிவேற்றம் செய்வதில் இருத்து ஆசிரியர்களை விடுவிப்பது என்பது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதியில் இருந்து அதை நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள். மற்ற கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன' என்றனர்.

விளக்கக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆகியோரும் பங்குபெற்று ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் தொடர்பாகவும், அதில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் பேசினர்.

நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட 12 கோரிக்கைகள் என்ன?

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர் நிறைவேற்றுவதாக உறுதியளித்த கோரிக்கைகளின் விவரங்களை ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

* இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை மூவர் குழுவிற்கு பரிந்துரை செய்து தீர்வு காணுதல்.

* எமிஸ் பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து, ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு தவிர, பிற அனைத்து வகையான பதிவேற்றப் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

* எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் கிடையாது.

* பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் (எஸ்.எம்.சி.) ஆண்டிற்கு 4 முறை கூட்டினால் போதும்.

* உயர்கல்வி படித்த 4,500 பேருக்கு பின்னேற்பு அனுமதி ஆணை வழங்கப்படும்.

* உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு பருவகால ஊதிய உயர்வின்றி 'என்ட்ரீ பே' மட்டுமே பெற்றுவரும் ஆசிரியர்கள் 1,500 பேருக்கு நியமனம் முதல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்.

* பி.லிட். முடித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள், அதன் பின்னர் பி.எட். படித்தால் வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கு ஏற்படுத்தப்பட்ட தணிக்கைத் தடைகள் நீக்க நடவடிக்கை.

* 58 மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பள்ளித்துணை ஆய்வர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டு, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு பணி மாற்றம் அளிக்கப்படும்.

* பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும். 3 மாத காலத்திற்குள் மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

* 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது வரை முதல் தகவல் அறிக்கை 586 பேருக்கு நிலுவையில் உள்ளது. இதனால் வெளிநாடு அனுமதி, விருப்பப் பணித்துறப்பு கோருபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் ரூ.5,400 தர ஊதியம் பெற்றவர்களின் தணிக்கைத்தடை முற்றிலும் நீக்கப்படும். அவர்களே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் நேர்வில் அதன் தரஊதியம் தொடர ஆணை பெறப்படும்.

* பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவை தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், பதவி உயர்வு பணிமூப்பின் அடிப்படையிலேயே வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும். விரைந்து தீர்வுகாண தனிக்கவனம் செலுத்தப்படும்.


Related Tags :
Next Story