அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜூன் 12-ந்தேதி ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு


அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜூன் 12-ந்தேதி ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 9 Jun 2023 10:46 AM GMT (Updated: 9 Jun 2023 11:02 AM GMT)

அதிமுக பொதுக்குழு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஒரு மாத இடைவெளிக்கு பின் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்றில்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஓபிஎஸ் எந்த உரிமையும் கோர முடியாது. ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படியே, விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, அதில் எந்த தவறும் இல்லை.

பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் தலைவராக, முதல்வராக இருந்திருக்கலாம். தலைவர்கள் வரலாம், போகலாம். மக்களின் விருப்பப்படிதான் கட்சி தொடர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன்கருதியே எடுக்கப்பட்டன. நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப்பசி காரணமாகவே இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்" என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஐகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதத்தை தொடங்கினார். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சி விதியை எம்.ஜி.ஆர் வகுத்தார். அந்த விதி நான்கு ஆண்டுகள் தவிர்த்து இதுவரை அமலில் உள்ளது என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனு மீது 5-ம் நாளாக வாதம் நடந்த நிலையில் வழக்கை வருகிற ஜூன் 12-ந்தேதி திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story