அதிமுக அலுவலகம் சூறை - சிபிசிஐடிக்கு அதிரடி உத்தரவு


அதிமுக அலுவலகம் சூறை - சிபிசிஐடிக்கு அதிரடி உத்தரவு
x

வழக்கின் நிலை குறித்த அறிக்கையை 4வாரத்திற்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

சென்னை,

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரம் திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது, ஓ பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் சென்றார். அப்போது ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து சொத்து ஆவணங்கள், வாகனங்களில் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்து சென்று விட்டதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரிக்கவில்லை என்பதால் இந்த வழக்கை சிபிசிஐடி -க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் சி.வி. சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டிருக்க கூடிய நிலையில் , இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,

சி.வி. சண்முகம் தரப்பில் , இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி தரப்பில், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாகவும் , ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் மீது வழக்கு பதியபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 40 பேர் முன்ஜாமின் வாங்கி உள்ளதாகவும் , 116 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. விசாரணைகள் முறையான கோணத்தில் நடைபெற்று வருவதால், வழக்குகள் குறித்த விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தேவைக்கு அதிகமாகவே தனது நேரத்தை வீணடித்திருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, காவல்துறை தனது பணியை செய்யட்டும் என்றும் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை குறித்த அறிக்கையை 4வாரத்திற்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.



Next Story