என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடலூர்,
கடலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. 8-வது மாநாடு வடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் ராசா உக்கரவேல், ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தினர். மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாநாடு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
மாநாட்டில், புதிய மோட்டார் வாகன சட்ட அபராத தொகை உயர்வை உடனே குறைக்க வேண்டும், கட்டுமான தொழிலாளருடைய குழந்தைகளின் கல்வி செலவினை வாரியம் ஏற்க வேண்டும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க மணல் குவாரியை திறக்க வேண்டும், என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் குளோப், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் குப்புசாமி, கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட குழு சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏ.ஐ.டி.யூ.சி.யினர் வடலூர் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மாநாடு நடந்த இடத்துக்கு வந்தனர்.