பேரிடர், அவசர கால நிலை குறித்து ெபாதுமக்களின் செல்போனுக்கு வந்த எச்சரிக்கை தகவல்


பேரிடர், அவசர கால நிலை குறித்து ெபாதுமக்களின் செல்போனுக்கு வந்த எச்சரிக்கை தகவல்
x

பேரிடர், அவசர கால நிலை குறித்து ெபாதுமக்களின் செல்போனுக்கு வந்த எச்சரிக்கை தகவல் வந்தது.

பெரம்பலூர்

எச்சரிக்கை தகவல்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க மத்திய அரசின் தொலை தொடர்பு துறையால் செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை தகவல் ஒலியுடன் நேற்று செல்போன்களுக்கு அனுப்பப்பட்டது.

அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி நேற்று மதியம் முதல் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டது. செல்போன்களுக்கு அதிர்வு சத்தத்துடன் இந்த எச்சரிக்கை தகவல் அவ்வப்போது வந்தது. ஏற்கனவே இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்களில் பெரும்பாலானோர் பதற்றமடையவில்லை.

பதற்றம்

கிராமப்புறங்களில் தான் பொதுமக்களில் சிலா் தங்களது செல்போன்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி அதிர்வு ஒலியுடன் வந்ததை கண்டு பதற்றம் அடைந்தனர். செல்போன் வெடித்து விடுமோ என்று கூட அவர்கள் அச்சமடைந்தனர். அவர்களுக்கு இது குறித்து தெரிந்தவர்கள் கூறி புரிய வைத்தனர்.

பயனுள்ளதாக இருக்கும்

இது குறித்து பெரம்பலூர் அருகே லாடபுரத்தை சேர்ந்த பட்டதாரி முத்துபாண்டியன் கூறுகையில், பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அவசர கால எச்சரிக்கை தகவலை அனுப்பும் 'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' திட்டத்தின் சோதனை ஓட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் தொடங்கப்பட்டது. சோதனை ஓட்டமாக பேரிடர் கால எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்போன்களுக்கு அனுப்பப்படும் என்றும், இதனால் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் ஏற்கனவே செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பிறகு எனது செல்போனுக்கு வைப்ரேஷன் (அதிர்வு) சத்தத்துடன் இந்த சோதனை பேரிடர் எச்சரிக்கை குறுஞ்செய்தி தமிழ், ஆங்கில மொழியில் வந்தது. இந்த குறுஞ்செய்தி வரும்போது செல்போன் அதிர்வானதால் சற்று பதற்றம் ஏற்படத்தான் செய்தது. அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்துவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்றடையக்கூடிய வசதி உள்ளதால் அவா்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஏதுவாக இருக்கும், என்றார்.

அச்சமடைந்தேன்

அரியலூர் மாவட்டம், தா.பழூரை சேர்ந்த திருவேங்கடம் கூறுகையில், எனது செல்போனுக்கு இரண்டு முறை எச்சரிக்கை அதிர்வு ஏற்பட்டது. திடீரென அது போன்று அதிர்வு ஏற்பட்டதால் ஒருவேளை செல்போனுக்கு வைரஸ் தாக்குதல் ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்று அச்சமடைந்தேன். அது போன்று எதுவும் இல்லை. செல்போனில் அதிர்வு ஏற்பட்டபோது வந்த குறுஞ்செய்தியில் அது குறித்து விளக்கமாக கூறப்பட்டு இருந்ததை கண்டு, அதிர்ச்சியில் இருந்து மீண்டு சகஜ நிலைக்கு திரும்பினோம். இந்த சோதனை குறித்து முன்கூட்டியே ஏதாவது குறுஞ்செய்தி வந்துள்ளதா என்று பார்த்தபோது நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார்கள். சரியான நேரத்தில் குறுஞ்செய்தி முன்னெச்சரிக்கையாக அனுப்பப்பட்டு இருந்தால், திடீரென நாங்கள் அச்சமடைந்து இருக்க மாட்டோம், என்றார்.


Next Story