கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் கைதான 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு


கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் கைதான 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
x

கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனையை நாளை சிவகங்கை கோர்ட்டு அறிவிக்கிறது.

சிவகங்கை

கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கான தண்டனையை நாளை சிவகங்கை கோர்ட்டு அறிவிக்கிறது.

3 பேர் படுகொலை

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 65), சண்முகநாதன்(31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேரும், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ந்தேதி இரவு படுகொலை செய்யப்பட்டனர்.

கோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான முன் விரோதத்தில் வேறு ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களை வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் தனசேகரன் (32) என்பவர் சம்பவம் நடைபெற்று 1½ ஆண்டுக்கு பிறகு இறந்தார்.

இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 2 பேர் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டனர். 3 பேர் சிறுவர்களாக இருந்தனர். ஒருவர் தலைமறைவானார்.

27 பேரும் குற்றவாளிகள்

இதனால் மீதமுள்ள 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி முத்துக்குமரன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதையொட்டி சம்பவம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தீர்ப்பையொட்டி சிவகங்கை கோர்ட்டிலும் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் கோர்ட்டுக்கு செல்லும் வழிநெடுகிலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இதற்கிடையே நேற்று காலை முதலே கோர்ட்டு வளாகப்பகுதியில் கச்சநத்தம் வழக்கில் தொடர்புடையவர்களின் உறவினர்கள் கூடினர்.

இந்நிலையில் நேற்று மாலையில் நீதிபதி முத்துக்குமரன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்படுவதாக தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் நாளை (3-ந் தேதி) அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வாக்குவாதம்

கச்சநத்தம் வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருக்கும் 27 பேரும், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். தீர்ப்புக்கு பின்னர் அவர்கள் மீண்டும் மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டனர்.

அவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் திரண்டிருந்த அவர்களுடைய உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் சிவகங்கை தாசில்தார் தங்கமணி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story